வெளிப்படுத்தின விசேஷம் 8:1-5

வெளிப்படுத்தின விசேஷம் 8:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது. இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. இன்னொரு இறைத்தூதன் வந்து, பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் ஒரு தங்க தூபக்கிண்ணத்தை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கப் பலிபீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடனும் சேர்த்து தூபங்காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது. அந்தத் தூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடன் கலந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது. பின்பு அந்தத் தூதன் தூபக்கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பினான். அவன் அந்த நெருப்பைப் பூமியின்மேல் வீசி எறிந்தான். அப்பொழுது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.

வெளிப்படுத்தின விசேஷம் 8:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.

வெளிப்படுத்தின விசேஷம் 8:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைத்தார். அப்போது ஏறக்குறைய அரை மணி நேரத்துக்குப் பரலோகம் முழுவதும் அமைதி ஏற்பட்டது. தேவனுக்கு முன்னர் ஏழு தேவதூதர்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. இன்னொரு தூதன் வந்து பலிபீடத்தின் அருகில் நின்றான். அவன் தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்திருந்தான். தேவனுடைய பரிசுத்த மக்களின் பிரார்த்தனைகளோடு பொற்பீடத்தின் மீது எரிக்கும் பொருட்டு அவனிடம் மிகுதியான தூபவர்க்கம் கொடுக்கப்பட்டது. தூதனின் கையில் உள்ள கலசத்தில் இருந்து தூபப் புகையானது தேவனிடம் சென்றது. அது தேவனுடைய மக்களது பிரார்த்தனைகளோடும் சென்றது. பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்தான். பின்பு அதைப் பலிபீடத்து நெருப்பால் நிரப்பினான். பின் அதனைப் பூமியில் வீசியெறிந்தான். அதன் பிறகு அங்கே மின்னலும், இடியும், வேறு சப்தங்களும், நிலநடுக்கமும் ஏற்பட்டன.

வெளிப்படுத்தின விசேஷம் 8:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங்கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்