வெளிப்படுத்தின விசேஷம் 22:1-5

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை. இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள். அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும். இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள். இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை. தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் ராஜாக்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்