எபிரெயர் 10:19-39

எபிரெயர் 10:19-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால் பிரியமானவர்களே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்கு தைரியம் நமக்கு உண்டு. அவர் திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதாக வாழும் வழியை நமக்குத் திறந்திருக்கிறார். அதுவே அவருடைய மாம்சம். இப்பொழுது இறைவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாக நமது பிரதான ஆசாரியர் இருக்கிறபடியால், நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக. நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும் நற்செயல்களைச் செய்வதிலும் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம் என்பதைப்பற்றி சிந்திப்போம். சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகிறதுபோல, நாமும் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கிறதினால் நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம். நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும், வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது. ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும். மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள். அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும். ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே. வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள். சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள். ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும். நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார். ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால், நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம். நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.

எபிரெயர் 10:19-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால், அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும், தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே. முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள். நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது. வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.

எபிரெயர் 10:19-39 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும். நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும். சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும். நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்” என்றும் சொன்னார். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும். நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள். எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். கொஞ்ச காலத்தில், “வரவேண்டியவர் வருவார், அவர் தாமதிக்கமாட்டார். விசுவாசத்தினாலே நீதிமானாக இருக்கிறவன் பிழைப்பான். அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால் நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.” ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

எபிரெயர் 10:19-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்