1 தெசலோனிக்கேயர் 1:1-10

1 தெசலோனிக்கேயர் 1:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல், சில்வான், தீமோத்தேயு, ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. நாங்கள் எங்களுடைய மன்றாட்டுகளில் உங்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நமது இறைவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு முன்பாக, உங்கள் விசுவாசத்தினால் வரும் செயலையும், அன்பினால் உண்டாகிய வேலையையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உங்களுக்குண்டான சகிப்புத்தன்மையையும் நாங்கள் நினைவுகூருகிறோம். இறைவனால் அன்பு செலுத்தப்படுகிற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வெறும் வார்த்தைகளோடு வரவில்லை. அந்த நற்செய்தி வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக நாங்களும் உங்களிடையே எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஏற்பட்ட கடுந்துன்பத்தையும் பொருட்படுத்தாமல், நற்செய்தியை பரிசுத்த ஆவியானவர் கொடுத்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கிறவர்களானீர்கள். இவ்விதமாய் நீங்கள் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு முன்மாதிரிகளானீர்கள். உங்களிடமிருந்தே கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்திருக்கிறது. இறைவனில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமும் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, அதைக்குறித்து நாங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் அவ்விடத்திலுள்ள மக்களே நீங்கள் எப்படி வரவேற்றீர்கள் என்பதைப்பற்றி அவர்களே அறிவிக்கிறார்கள். நீங்கள் எவ்விதமாய் உண்மையான உயிருள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, இறைவன் அல்லாதவைகளைக் கைவிட்டு இறைவனிடம் திரும்பினீர்கள் என்பது பற்றியும் அறிவிக்கிறார்கள். அத்துடன், இறைவன் இறந்தோரிலிருந்து எழுப்பிய தமது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இந்த இயேசுவே வரப்போகும் கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.

1 தெசலோனிக்கேயர் 1:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள். எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது. ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.

1 தெசலோனிக்கேயர் 1:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்குள்ளும் இருக்கும் தெசலோனிக்கேயாவில் உள்ள சபையோருக்கு எழுதுவது. தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. நாங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் உங்களை நினைவுகூருகிறோம். உங்கள் அனைவருக்காவும் தொடர்ந்து தேவனிடம் நன்றி கூறுகிறோம். பிதாவாகிய தேவனிடம் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் விசுவாசத்தினாலும், அன்பினாலும் நீங்கள் செய்தவற்றுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் உறுதியுடன் இருப்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம். உங்களிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தோம். ஆனால் நாங்கள் வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். பரிசுத்த ஆவியானவரோடும் முழு உறுதியோடும் நாங்கள் அதைக் கொண்டு வந்தோம். உங்களோடு நாங்கள் இருந்தபோது எப்படி வாழ்ந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலேயே வாழ்ந்தோம். நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார். மக்கதோனியா, அகாயா ஆகிய நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு ஆனீர்கள். உங்கள் மூலம் மக்கதோனியாவிலும், அகாயாவிலும் தேவனுடைய போதனை பரவியது. தேவனுடைய பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எல்லா இடங்களுக்கும் தெரிய வந்தது. எனவே உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள். உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டு பரலோகத்திலிருந்து வரப்போகும் தேவனுடைய குமாரனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். தேவன் தன் குமாரனை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார். இயேசுவாகிய அவரே, நியாயத்தீர்ப்பு அளிக்கப்போகும் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.

1 தெசலோனிக்கேயர் 1:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே, நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்