எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:20-40

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:20-40 TAERV

யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். யாக்கோபு யோசேப்பின் குமாரர்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும். யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான். மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர். மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய குமாரத்தியின் குமாரன் என அழைக்கப்படுவதை மறுத்தான். பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான். மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் ராஜாவின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான். மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள். எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன. ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள். பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள். தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:20-40 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்