வெளி 1:9-18

வெளி 1:9-18 IRVTAM

உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். கர்த்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது. அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன். அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்