எபி 11:20-40

எபி 11:20-40 IRVTAM

விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள். பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள். பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள். இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள். நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.

எபி 11:20-40 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்